31 Mar 2018

புரிதல்!

புரிதல்!


கத்தியே சொன்னாலும்
கால் பகுதி மட்டுமே
கபாலம் கடந்து நுழைகிறது...!

அரைகுறையாய் கேட்டு
அதில்பாதி காற்றோடு விட்டு 
அரை அரக்கனாய் மாறுகிறோம்...!

பிடிக்காத ஒன்றை நீ 
செய்து தொலைக்கிறாய்...!
பிடித்ததை கூட நான் 
மறந்து முழிக்கிறேன்...!!

நேரம் ஒதுக்கவில்லை
நேரம் கிடைக்கவில்லையென
ஒதுக்கி கிடைக்கும் நேரங்களில்
ஒரு உலகப்போரே வெடிக்கிறது...!

திட்டியும் கொட்டியும்
திகட்டி சலிக்கிறோம் நாம்...!

போதும் இந்த
பொல்லாத காதலென்று
வாரம் ஒருமுறையேனும்
வசனம் பேசுகிறோம்...!

ஆனாலும் நம்மை
ஆயுளெல்லாம் காதலிக்கச்செய்கிறது...!
சண்டைகளை முடித்துவைக்க - உன்
ஒரு புன்னகையோ,
ஒருதுளி கண்ணீரோ,
சில அணைத்தல்களோ,
சிறு முகம் திருப்பலோ என
இதிலொன்று போதுமென்கிற
உன் புரிதல்...

----அனீஷ் ஜெ...

28 Feb 2018

உலகம் ஆனாய் !

உலகம் ஆனாய் !


சாயம் போன மேகம் போலே
சாயங்கால வானம் போலே
உளிபடாத கல்லை போலே
எழுதிடாத சொல்லை போலே
வெறுமை தீயில்
வெந்து கிடந்தேனே...!

நடு இரவில் நிலவை போலே
சுடும் வெயிலில் குளிரை போலே 
வெறும் நிலத்தில் பூவை போலே
பெரும் கடலில் தீவை போலே
நீங்கா நிழலாய்
நீயும் வந்தாயே...!

கொட்டி தீர்க்கும் 
காதல் கொண்டாய்...!
தொட்டு தூங்க
தோள்கள் தந்தாய்...!
முட்டிமோதும் முத்தத்தாலே
முழுதாய் கொன்றாயே...

விழிகள் பார்த்து 
உருகி நின்றேன்...!
மொழிகள் சேர்த்து
பருகி தின்றேன்...!
உன் வழிகள் தோறும்
உடன் வந்து செல்வேனே...

காதல் தந்தாய்...!
காத்திருந்தாய்...!!
ஒற்றை இதயமாய்
ஒட்டி கலந்தாய்...!!!
உயிரில் நுழைந்து - என்
உலகம் ஆனாயே...

----அனீஷ் ஜெ...

31 Jan 2018

வீடொன்று இருக்கிறது!

வீடொன்று இருக்கிறது!


வீடொன்று இருக்கிறது...!

வருபவர்களில் சிலருக்கே 
வாசல்கடந்தும் அனுமதி...!

உள்ளிருப்பவர்களோடு 
பாகுபாடுமில்லை 
பகையுமில்லை...!

வீட்டை நேசிக்கும் சிலரோ 
கூட்டி பெருக்கி
வண்ணம் தீட்டுகிறார்கள்...!

வந்தவர்களில் பலரோ
தரையை உடைத்து
சுவரை முறித்து
ஆனந்தமாகிறார்கள்...!

நேசித்துக்கொண்டிருந்தவர்களும்
பலகாலம் செல்ல
பராமரிப்பதை விட்டுவிட்டு
பாழாக்க தொடங்குகிறார்கள்...!

கடுங்கோபம் கொண்ட
வீட்டின் சொந்தக்காரனோ
அத்தனைபேரையும்
அங்கிருந்தே துரத்துகிறான்...!

பாழடைந்துபோன அந்த வீடு 
இப்போதும் அங்கேயே இருக்கிறது...!

என் நெஞ்ச்சு கூட்டிற்குள்
வீடொன்று இருக்கிறது...!

----அனீஷ் ஜெ... 

31 Dec 2017

உணவு !

உணவு !


சிறு குழந்தைபோல‌
சிறிதும் விருப்பமின்றி
அலறி கதறி அழுது
அடம்பிடிக்கிறேன் நான்...!

கருணையேதும் இல்லாமல்
கனவெனும் இலையில் பரிமாறி - என்
உயிர்வாய் திறந்து
உள்ளே திணித்துக்கொண்டிருக்கிறது...!

உதறிச்செல்லவோ,
உமிழ்ந்துதள்ளவோ வழியேதுமில்லை...!
இமைகளை இறுக்கி அடைத்தே
உயிருக்குள் விழுங்குகிறேன்...!!
இரவுக‌ள் எனக்கூட்டும்
உன் நினைவுகளை...

‍‍‍‍---- அனீஷ் ஜெ...

30 Nov 2017

தொலைக்க மறந்தவன் !

தொலைக்க மறந்தவன் !


வெகுநேரமாய்
அதே சாலையோரம்
நின்றுகொண்டிருக்கிறேன்...!

சிறிதாய் படபடக்கிறது கைகள்...!
சிகரெட்டொன்றை 
பற்றவைக்கவேண்டும் போலிருக்கிறது...!

நெற்றியின் வெற்றிடத்தை
இருகை விரல்களும்
இறுக தடவிக்கொண்டிருக்கிறது...!

தலையை கோதியபடியே
தனியே பேச முயற்சிக்கிறேன்...!

இன்றிரவு தூக்கம் வரப்போவதில்லை...!
இன்னும் இரண்டு நாட்களுக்கு நான்
இயல்பாய் இருக்க போவதில்லை...!!

இன்றோடு போகட்டும்
இன்னொரு நாள் 
என் கண்ணில்பட்டுவிடாதே...!

ஏனென்றால்
என்றோ நீ என்னை
மறந்து தொலைதிருக்கலாம்...!
நான் உன்னை
தொலைக்க மறந்துவிட்டேன்...!!

----அனீஷ் ஜெ...

17 Oct 2017

தனிமையும்... நானும்...

தனிமையும்... நானும்...


கனவுகளை புதைத்துவிட்ட
கல்லறை தோட்டம் வழியே
நடைபிணத்தின் சிறு உருவாய்
நடமாடுகிறேன் நான்...!

நிறைவேறாத ஆசைகளின்
நீண்டதொரு பட்டியல்
கவலை சேகரிக்கும் இதயத்தில்
கசங்கி கிடக்கிறது...!

நடக்கும் பாதைகளில்
நாளை பூக்கள் கிடக்குமென
இன்று கிழிக்கும் முட்களின் மேல்
இரத்தம் சொட்ட நடக்கின்றேன்...!

தாலாட்டும் சோகமும்
தலைகோதும் தனிமையும்
இமைகளின் வாசல்வழியே
இரவெல்லாம் வழிகிறது...!

எதிர்பார்த்து கிடைக்காத அன்பும்
ஏமாறி உடைந்த நெஞ்சும்
வலிதரும் பெரும் சுமையாய்
வாழ்வோடு நீள்கிறது...!

முடித்து விடலாமென நினைக்கும்
முடிவுறா என் வாழ்க்கையை
மீண்டும் வாழச்சொல்லி - என்னை
மீட்டுச் செல்கிறது....!
என் ஏதோ ஒரு நம்பிக்கை...
இல்லை
யாரோ ஒருவரின் வேண்டுதல்...

----அனீஷ் ஜெ...

Written By : Anish J.
Requested By : Ra.Priyanka.

16 Oct 2017

சொல்லாத கதை !

சொல்லாத கதை !


உன் சிறு குறுஞ்செய்தியுடன்
என் அலைபேசி உதிர்க்கும்
ஒரு நொடி வெளிச்சத்திற்காய்
இருட்டிலே காத்திருந்த நேரங்கள்...!

எதிர்படும் உன்னை
நிமிர்ந்துபார்க்க மறுத்து
தரைநோக்கி கடந்து சென்று
திரும்பிபார்த்து தவித்த தருணங்கள்...!

கனவுகளா, மனதின் கற்பனையா
நினைவுகளா இல்லை
நீ வந்ததா என குழம்பியே
நான் தொலைத்த தூக்கங்கள்...!

உன்னோடு பேச முயலும்
முறைகள் ஒவ்வொன்றும்
ஓசையில்லாமல் உள்ளே
உதடுகளில் மடியும் வார்த்தைகள்...!

தினம் கொல்லும் காதலுடன்
உன்னிடம் சொல்ல எனக்கு
சொல்லாத கதைகள் பல இருக்கிறது...!
நீ மட்டும் என்னோடு இல்லை...

----அனீஷ் ஜெ...

Written By : Anish J.
Requested By : Keerthana.

5 Oct 2017

நண்பன்

நண்பன்


சில சிரிப்புகளின் முடிவில்,
பல சோகங்களின் வடிவில்,
சில பாடல்களின் வரியில்,
பல பயணங்களின் வழியில்,
நிறமில்லா நீர்த்துளிகள்
விழிகளில் வந்து நிறைகிறது...!
என்றோ நான் தொலைத்த
என் நண்பனின் நினைவுகளாய்...

----அனீஷ் ஜெ...

Written By : Anish J.
Requested By : Azii.

28 Sept 2017

குறுஞ்செய்தி !

குறுஞ்செய்தி !


மழை இரவின்
பெரும்தூக்கமும் தராத சுகம்...!

வெயில் நாளில்
மரநிழலும் கொடுக்காத ஆனந்தம்...!

கடும் தாகத்தில்
குட நீரும் தீர்க்காத தாகம்...!

தென்றல் தொட்ட பொழுதில்
தேகமும் உணராத புத்துணர்சி...!

நகைச்சுவை நிரம்பிய
திரைப்படமொன்று வழங்காத புன்னகை...!

இவையெல்லாம் எனக்கும்
நொடிப்பொழுதில் கிடைக்கிறது...!
நீ எனக்கனுப்பும்
“ஹாய்” என்ற குறுஞ்செய்தியில்...

----அனீஷ் ஜெ...

15 Sept 2017

இரவின் கதைகள் !

இரவின் கதைகள் !


நிசப்த இரவு...!

நிலா வெளிச்சம்...!

நிற்காத தென்றல்...!

நின்று தீர்ந்த மழை...!

நீயில்லாத நான்...!

என் இரவுக்குத்தான்
எத்தனை கதைகள்...!!

----அனீஷ் ஜெ...